மெஸ்ஸியைக் கிண்டல் செய்ததால் விபரீதம்: யூடியூபர் IShowSpeed-க்கு எதிரான இனவெறித் தாக்குதலுக்கு ஃபிபா கண்டனம்!

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் போது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற யூடியூபரான ஐஷோஸ்பீட் (IShowSpeed) இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரை நேரில் கண்டு களித்து வரும் ஐஷோஸ்பீட், கடந்த ஜூலை 3ஆம் திகதி நடைபெற்ற ஆர்ஜென்டினா – கேப் வெர்டே மோதலின் போதும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ஜென்டினா – எகிப்து அணிகளுக்கு இடையிலான ரவுண்ட்-ஆஃப்-16 போட்டியின் போதும் ஆர்ஜென்டினா ரசிகர்களால் இனரீதியாக இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.

குறிப்பாக எகிப்து அணிக்கு ஆதரவான சட்டையை அணிந்திருந்த அவர், ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பெனால்டி உதை எடுக்க முற்பட்டபோது, அவரை நோக்கி கூச்சலிட்டு கவனத்தைத் திசைதிருப்பியுள்ளார். இதன் போது மெஸ்ஸி அந்தப் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்ஜென்டினா ரசிகர்கள் சிலர், ஐஷோஸ்பீட்டை நோக்கி குரங்குச் சைகைகளைச் செய்து, மிருகக்காட்சிசாலைக்குச் செல்லுமாறு இனவெறி வசவுகளைப் பொழிந்துள்ளனர்.

இச்சம்பவத்தின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், “கால்பந்து விளையாட்டிலோ அல்லது சமூகத்திலோ இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எவ்வித இடமும் இல்லை” எனக் கண்டித்துள்ள ஃபிபா, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.