கனடா செல்லும் கால்பந்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை – “FIFA விசா” என்ற ஒன்று கிடையாது!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண கனடா செல்லத் திட்டமிட்டுள்ள ரசிகர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “FIFA விசா” என்ற பெயரில் பரவும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என கனேடிய குடிவரவுத் துறை (IRCC) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் “சிறப்பு FIFA விசா” மூலம் கனடா செல்லலாம் என சில ஏஜென்ட்கள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் சாதாரண சுற்றுலாப் பயணியாகவே (Tourist) கருதப்படுவார்கள். அவர்கள் முறைப்படி ‘விசிட்டர் விசா’ (Visitor Visa) அல்லது ‘மின்னணு பயண அங்கீகாரம்’ (eTA) மூலம் மட்டுமே நாட்டுக்குள் நுழைய முடியும்.

கனடாவுக்குள் நுழைவதற்கு எவராலும் 100% உத்தரவாதம் அளிக்க முடியாது. விசா பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் ஏஜென்ட்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பத்தில் தவறான தகவல்களையோ அல்லது போலியான ஆவணங்களையோ சமர்ப்பித்தால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை கனடாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.