முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவான CIABOC அதிகாரிகளால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

குறிப்பு: மற்றொரு செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணையின் அடிப்படையிலும் கைது இடம்பெற்றதாக CIABOC தெரிவித்துள்ளது.