
இலங்கை கனிய மணல் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் தொழிலாளர் பதவிகளுக்கு, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்களை சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டமையின் ஊடாக 3 கோடியே 44 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அதன் முன்னாள் தலைவர் உதேனி ஜயரத்ன தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகவும், உரிய நியமன நடைமுறைகளை மீறியும் தொழிலாளர்களை இணைத்து அவர்களுக்கு சம்பளம் வழங்கியதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


