இலங்கையில் கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்ய ஃபீஃபா (FIFA) உறுதி: புதிய மைதானம் அமைக்கவும் திட்டம்

இலங்கையில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) வாக்குறுதியளித்துள்ளதுடன், புதிய கால்பந்து மைதானம் ஒன்றை அமைப்பது மற்றும் வீரர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று (24) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களைச் சந்தித்தபோதே, ஃபீஃபாவின் ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்திய பணிப்பாளர் சஞ்சீவன் பாலசிங்கம் இந்த உறுதியை வழங்கினார்.இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதற்கு வழங்கப்படக்கூடிய உதவிகள் குறித்து, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் இவிளையாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஃபீஃபா முழுமையான ஆதரவை வழங்கும் என பாலசிங்கம் அமைச்சரிடம் உறுதியளித்தார்.மேலும், ஃபீஃபாவின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் புதிய கால்பந்து மைதானம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பாகவும் இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன், கால்பந்து வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவது குறித்தும் இச்சந்திப்பில் முக்கியமாகப் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.