
சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை மற்றும் பெருந்தொகை அபராதத்திற்கு முகங்கொடுத்துள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனுஜன் (Sivarasa Anujan) என்பவருக்கு அரச மன்னிப்பு மற்றும் கருணை காட்டுமாறு கோரி, இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் (King Salman bin Abdulaziz Al Saud) அவர்களிடம் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலஹ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்பிக்களால் செப்டம்பர் 21, 2026 திகதியிட்டு கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், அனுஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள நிதி அபராதத்தில் தளர்வு, தண்டனை குறைப்பு அல்லது விலக்கு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள இவரது குடும்பம் இவரது வருமானத்திலேயே பெரிதும் தங்கியுள்ள நிலையில், குறைந்த வருமானம் ஈட்டும் ஒரு தொழிலாளியான அனுஜனின் நிதி மூலதனத்திற்கு அப்பாற்பட்டதாக இந்த அபராதத் தொகை அமைந்துள்ளதாக எம்பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.தான் தண்டனை பெறக் காரணமான சம்பவத்திற்குப் பிறகு அனுஜன் தனது தவறை உணர்ந்து மிகுந்த மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் முஸ்லிம்களின் மத உணர்வுகள் மீதும் கொண்ட மரியாதையை வெளிப்படுத்தி மன்னிப்பும் கோரியுள்ளார் என்பதை இக்கோரிக்கை மனுவில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சவூதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்குத் தங்களின் முழுமையான மரியாதையை வெளிப்படுத்தும் அதேவேளையில், இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் முற்றிலும் மனிதநேய அடிப்படையில் இக்கோரிக்கை முன்வைக்கப்படுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.#SriLankaNews #SaudiArabia #RizvieSalih #SriLankaParliament #SivarasaAnujan


