ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சொனால், அசித்த மற்றும் பிரபாத் அதிரடி முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் (ஐசிசி) வெளியிடப்பட்ட புதிய ஆடவர் டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ மற்றும் இடதுகை சுழல்;பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளனர்.

அதற்கமைய, டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ 15ஆவது இடத்திற்கும், பிரபாத் ஜயசூரிய 16ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

அதேபோல, துடுப்பாட்டத் தரவரிசையில், இலங்கையின் டெஸ்ட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா இரண்டு இடங்கள் முன்னேறி 22ஆவது இடத்தைப் பிடித்துள்ளதோடு, வளர்ந்து வரும் துடுப்பாட்ட வீரரான சொனால் தினுஷ 49 இடங்கள் என்ற பாரிய பாய்ச்சலுடன் 54ஆவது இடத்திற்கு முன்னேறிக் கொண்டுள்ளார். இவர் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 3 சதங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பந்த் ஆறு இடங்கள் முன்னேறி, ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் சிறந்த முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் (7ஆவது இடத்திற்கு) இடம்பிடித்துள்ளார். கே.எல். ராகுல் ஐந்து இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 165 ஓட்டங்களால் இலங்கையைத் தோற்கடிக்க 10 விக்கெட்டுகளை வீழ்த்திப் பங்களிப்பு வழங்கிய இந்திய சுழல்பந்து வீச்சாளர் மானவ் சுத்தார், 28 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதனிடையே, கடந்த வாரம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துது அசத்தியுள்ளார். நியூசிலாந்தின் மெட் ஹென்றி மற்றும் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை முந்திய அவர், 10 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார்.

மறுபுறத்தில் இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் டெஸ்ட் துடுப்பாட்டத் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.