
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஒலிம்பிக் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்கால் தசைநார் காயம் காரணமாக எதிர்வரும் டயமண்ட் லீக் இறுதிப் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டு விழா உட்பட 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து தடகளத் தொடர்களில் இருந்தும் முழுமையாக விலகியுள்ளார்.
28 வயதான நீரஜ் சோப்ரா, காயத்தில் இருந்து மீண்டு வந்து அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லௌசேன் டயமண்ட் லீக் தடகளத் தொடரில் பங்கேற்று 88.05 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்தச் சீசனின் மிகச்சிறந்த சாதனையைப் படைத்த கையோடு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அதன் தொடர்ச்சியாக, பெல்ஜியத்தில் செப்டம்பர் 4ஆம் 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வாண்டா டயமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில், பயிற்சியின் போது அவருக்குக் கணுக்கால் தசைநார் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவில், நீரஜ் சோப்ராவின் காயம் தீவிரமடைந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, டயமண்ட் லீக் இறுதிப் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டு விழா உட்பட 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து தடகளத் தொடர்களில் இருந்தும் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில்,’கடினமான பயிற்சிக்குப் பின், சமீபத்தில் லௌசேனில் சிறப்பாக செயல்பட்டதால் வரும் சீசனில் அசத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். துரதிஷ்டவசமாக கணுக்காலில் காயம் ஏற்பட்டது. வைத்தியரின் அறிவுறுத்தலின் படி, எஞ்சியுள்ள சீசனில் இருந்த விலக முடிவு செய்துள்ளேன். காயத்தில் இருந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்த உள்ளேன்.’ என்றார்.
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும், இந்திய தடகள வரலாற்றில் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.


