சீனாவில் இலங்கை வீராங்கனை நிபுணி வாசனாவுக்கு தங்கப் பதக்கம்!

சீனாவில் நடைபெற்று வரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், மல்யுத்த விளையாட்டில் இலங்கை வீராங்கனை நிபுணி வாசனா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை டொன் தி கிம் ஓன்ஹ்-ஐ எதிர்கொண்ட நிபுணி, 3-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ள நிபுணியின் இந்த வெற்றி, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் விளையாட்டுத் திறனை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.