
(எம்.ஜே.ஜவ்சன் அஹமட்,
றாசிக் நபாயிஸ்,
ஏ.எல்.எம். ஷினாஸ்)
நாணல் கலை இலக்கிய வட்டத்தின் ஐந்தாவது ஆண்டு பூர்த்தி விழாவும், அதன் “மருதமுனை மான்மியம்” மலர் வெளியீடும், மருதமுனை கலாசார மண்டபத்தில் 25ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் தலைவி திருமதி பாத்திமா ஸூபா தல்ஹா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழா இலக்கிய ஆர்வலர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை பதிவு செய்தது.
நிகழ்வின் சிறப்பம்சமாக மருதமுனை கிராமத்தின் கலைப் பண்பாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் நாணல் கலை இலக்கிய வட்ட உறுப்பினர்கள் கலாசார பாரம்பரிய ஆடைகள் அணிந்து வந்ததுடன் அதிதிகள் கிழக்கு பக்கத்தில் இருந்து மேற்கை நோக்கி பிரதேச கலாசார முறைப்படி பொல்லடித்து வரவேற்கப்பட்டனர்.
வரவேற்கப்பட்ட அதிதிகள் கடந்த கால கலை கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முகமாக அத்தர் பூசி மண்டபத்தில் அமர்த்தப்பட்டனர்.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஏ.ஆர். மன்சூர் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவியும் சட்டத்தரணியுமான திருமதி மர்யம் மன்சூர் நளீம்தீன் அவர்கள், இலக்கியப் பயணங்கள் சமூகச் செல்வாக்கை உருவாக்கும் வண்ணம் இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
நாணல் மலர் ஆசிரியர் பாத்திமா ஸூபா மற்றும் இணையாசிரியர் றாசிக் நபாயிஸ் ஆகியோரைக் கொண்டு வெளியான இந்த “மருதமுனை மான்மியம்” மலர் தொடர்பான விமர்சனத்தை நாணல் கலை இலக்கிய வட்டத்தின் ஊடக ஆலோசகர் ஏ.எல்.எம். ஷினாஸ் அவர்கள் வழங்கினார்.
மேலும், புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபர் ஏ. முஹம்மட் அன்சார் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி, கிராமிய பண்பாட்டு அடையாளங்களையும் மரபு இலக்கியத்தையும் முன்னிறுத்தும் முயற்சிகளைப் பாராட்டினார்.
விழாவில் கவிதை வாசிப்புகள் இடம்பெற்றதுடன், மருதமுனை பிரதேசத்தின் பண்பாட்டு மரபை வெளிப்படுத்தும் கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
பாரம்பரிய அலங்காரங்களும் நிகழ்ச்சியின் காட்சிக்காகத்தை செழுமைப்படுத்தின. உள்ளூர் இலக்கிய ஆளுமைகளின் கூட்டு முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்திய இவ்விழா, மருதமுனை பண்பாட்டுத் தளத்திற்கு ஒரு புதிய ஆவலை ஏற்படுத்தியதாக கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.


