FIFA World Cup 2026™: டிக்கெட்டுகளைக் கோரி 500 மில்லியனுக்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

இந்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளைக் காண்பதற்கு, உலகெங்கிலும் இருந்து 500 மில்லியனுக்கும் (50 கோடி) அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா (FIFA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் டிக்கெட் விலைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையிலும், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இந்தத் தொடருக்கான ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பக் காலம் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. விண்ணப்பித்தவர்களில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்பது குலுக்கல் (Lottery) முறையில் தீர்மானிக்கப்படும். இது குறித்த முடிவுகள் பெப்ரவரி 5-ஆம் திகதிக்கு பின்னரே அறிவிக்கப்படும்.

இம்முறை டிக்கெட் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2022-ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை டிக்கெட் விலைகள் ஐந்து மடங்கு அதிகம் என ஐரோப்பிய கால்பந்து ஆதரவாளர்கள் சங்கம் (FSE) சாடியுள்ளது.

இந்த விமர்சனங்களை அடுத்து, சாதாரண ரசிகர்களுக்காக 60 அமெரிக்க டொலர் (சுமார் 18,000 இலங்கை ரூபா) பெறுமதியான விசேட சலுகை விலை டிக்கெட்டுகளை ஃபிபா அறிமுகப்படுத்தியுள்ளது.