
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் ) 19ஆவது பருவகால போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 26 முதல் மே 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக, அபுதாபியில் இன்று நடைபெற்ற அணி உரிமையாளர்களுடனான சந்திப்பின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) அட்டவணையை அறிவித்தது. ஐபிஎல் தொடரின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமங் அமின் இந்த திகதிகளை கூட்டத்தின் போது தெரிவித்தார்.
திகதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், முழுமையான போட்டி அட்டவணையை IPL நிர்வாகம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனிடையே, பெங்களூருவின் எம் சின்னசாமி மைதானம் 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மற்றும் இறுதிப் போட்டியை நடத்துமா என்பது இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சின்னசாமி மைதானம் கிடைப்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. பாரம்பரியமாக, ஐபிஎல் தொடரின் முதல் போட்டியும், இறுதிப் போட்டியும் நடப்பு சம்பியன்களின் சொந்த மைதானத்தில் நடைபெறும்.
இருப்பினும், றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்துவது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசிடமிருந்து நிபந்தனை அனுமதியை பெற்றுள்ளது. ஆனால் சில பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


