கத்தாரில் Tesla Roadster காருக்கான முன்பதிவு ஆரம்பம்; கட்டணம் QR 2.1 இலட்சம் முதல்!

அமெரிக்க மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான Tesla, தனது அடுத்த தலைமுறை Roadster மின்சார ஸ்போர்ட்ஸ் காருக்கான முன்பதிவுகளை கத்தாரில் ஆரம்பித்துள்ளது. இதற்கான முன்பதிவுக் கட்டணங்கள் QR 210,000 முதல் ஆரம்பிக்கின்றன.

Tesla நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, Roadster Performance மற்றும் Roadster Thrust ஆகிய இரண்டு வகைகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும். Performance வகைக்கு QR 210,000 ஆகவும், Thrust வகைக்கு QR 1,020,000 ஆகவும் முன்பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Rocket எனப்படும் மூன்றாவது வகை அழைப்பின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.

Thrust வகை மணிக்கு சுமார் 97 கிலோமீற்றர் வேகத்தை ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் என Tesla தெரிவிக்கிறது. Rocket வகையில் விசேட உந்துவிசைத் தொழில்நுட்பம் இடம்பெறுவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், அறிவிக்கப்பட்டுள்ள தொகைகள் இறுதி விற்பனை விலைகள் அல்ல என Tesla தெளிவுபடுத்தியுள்ளது. வாகனங்களின் இறுதி விலைகள் மற்றும் விநியோகத் திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு: https://www.tesla.com/ar_qa/roadster