2026 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் சுற்றுச்சூழல் தலைமைத்துவத்திற்கான விருதை வென்ற MAS

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான MAS ஹோல்டிங்ஸ், 2026 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் ஆறு விருதுகளைத் தனதாக்கியுள்ளதுடன், இலங்கை முழுவதும் உள்ள அதன் செயற்பாட்டுத் தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் செயற்திறன் மற்றும் நிலைபேறான தன்மைக்கான முயற்சிகளை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வு, கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான நடைமுறைகளுக்குப் பங்களிப்புச் செய்யும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.

ஆடைத் தொழிற்துறை பிரிவில், MAS ஷேட்லைன் தங்க விருதைப் பெற்றதுடன், MAS ஏஷியாலைன் வெள்ளி விருதைத் தனதாக்கியது. ஜவுளி பதனிடல் தொழிற்துறை பிரிவில், MAS வானவில் மற்றும் சிலுவெட்டா ஆகிய இரண்டு நிறுவனங்களும் வெள்ளி விருதுகளைப் பெற்றன. மேலும், ஆடைத் தொழிற்துறை பிரிவில் MAS ஸ்லிம்டெக்ஸ் மற்றும் லீனியா அக்வா ஆகியன தகுதிச் சான்றிதழ் விருதுகளைப் பெற்றன.

சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைத்தல், வளங்களின் வினைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிலைபேறான உற்பத்தி நடைமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தனது உற்பத்திச் செயற்பாடுகளில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஒருங்கிணைப்பதற்கான MAS நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.

உற்பத்திப் பொருட்கள், வாழ்க்கைத் தரம் மற்றும் புவி ஆகிய மூன்று தூண்களின் கீழ் தனது அர்ப்பணிப்புகளை வரையறுக்கும் நிலைபேறான தன்மைக்கான செயற்திட்டமான குழுமத்தின் ‘மாற்றத்திற்கான திட்டம் 2030’ என்ற செயற்திட்டத்தின் மூலம் இந்த முயற்சிகள் வழிநடத்தப்படுகின்றன. இந்தச் செயற்திட்டக் கட்டமைப்பின் ஊடாக, சுற்றுச்சூழல் சவால்களுக்குத் தீர்வு காணும் முன்னெடுப்புகளில் MAS தொடர்ந்தும் முதலீடு செய்வதுடன், தனது செயற்பாடுகள் மற்றும் தான் இயங்கும் சமூகங்களின் நீண்டகால மீள்தன்மைக்கும் ஆதரவளிக்கின்றது.

குறிப்பாகப் பாரிய அளவிலான உற்பத்தித் தொழிற்துறைகளில், அன்றாட வணிக நடைமுறைகளுடன் சுற்றுச்சூழல் செயற்திறனை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த விருதுகள் எடுத்துக்காட்டுகின்றன. உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பொறுப்புணர்வு மிக்க உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், சர்வதேசப் போட்டித்தன்மையைப் பேணுவதற்கும் நீண்டகாலப் பங்காண்மைகளைக் கட்டியெழுப்புவதற்கும் வலுவான சுற்றுச்சூழல் தரநிலைகள் அத்தியாவசியமானவையாக மாறி வருகின்றன.

MAS நிறுவனத்தைப் பொறுத்தவரை, பொறுப்புணர்வு மிக்க உற்பத்தியை முன்னெடுப்பதற்கும், இலங்கையின் பரந்த சுற்றுச்சூழல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்குப் பங்களிப்புச் செய்வதற்குமான தனது அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.