50ஆவது தேசிய விளையாட்டு விழா கபடியில் வடக்கு, கிழக்கிற்கு வெள்ளிப் பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 50ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற கபடிப் போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பாக கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது.

அதேபோல, தேசிய விளையாட்டு விழா கபடி இறுதிப் போட்டிக்கு முதல் தடவையாக தகுதி பெற்ற வட மாகாண பெண்கள் கபடி அணி, முதன் முறையாக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழா கபடி போட்டி காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், கடற்கரை கபடி போட்டிகள் ஒக்டோபர் 02, 03 மற்றும் 04 ஆகிய திகதிகளில் கம்பஹா, வதுபிடிவல உள்ளக விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் 9 மாகாணங்களையும் சேர்ந்த அணிகளும் 200 இற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான கபடி இறுதிப்போட்டியில் வடமத்திய மாகாண அணி, கிழக்கு மாகாண அணியை 21–25 மற்றும் 23–16 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஆண்கள் பிரிவின் சம்பியன் பட்டத்தைத் தன்வசமாக்கியது.

இதில் கிழக்கு மாகணத்தை சார்பில் களமிற்ங்கிய நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.  முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கபடியில் கிழக்கு மாகாணம் சார்பில் போட்டியிட்ட இதே மதீனா விளையாட்டுக் கழகம் வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இம்முறை வெள்ளிப் பதக்கம் வென்ற கிழக்கு மாகாண கபடி அணியில் இலங்கை கபடி அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் தலைவருமான அஸ்லம் சஜா, தேசிய கபடி அணி வீரர்களான சபிஹான் மற்றும் நப்ரிஸ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கபடியில் மூன்றாமிடம் இடத்தை தென் மாகாணம் அணி பெற்றுக்கொண்டதுடன், சிறந்த வீரருக்கான விருதை வடமத்திய மாகாணத்தின் ஏ. பி. ஜி. எம். சதுரங்க பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மேல் மாகாண அணி, வட மாகாண அணியை 19–13 மற்றும் 19–14 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான கபடி இறுதிப் போட்டிக்கு முதல் தடவையாக தகுதி பெற்ற வட மாகாண அணி, இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்தது. இதில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா கபடியில்  வட மாகாண பெண்கள் கபடி அணி வெண்கலப் பதக்கம்  வென்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, வெள்ளிப் பதக்கம் வென்ற வட மாகாண பெண்கள் கபடி அணியில் தேசிய அணிக்காக ஆடி வருகின்ற விமலேந்திரன் டிலுக்ஷனா மற்றும் இராசதுரை பிரியவரனா ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தமை மற்றுடிமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, இம்முறை தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான கபடியில் மூன்றாமிடம் இடத்தை ஊவா மாகாண அணி பெற்றுக்கொண்டதுடன், சிறந்த வீராங்கனைக்கான விருதை மேல் மாகாணத்தின் எஸ். ஏ. யு. ஹர்ஷணி ஜயவீர பெற்றுக்கொண்டார்.