
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டர்ஹம் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் மைதானத்தில் நேற்று (22) ஆரம்மபாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாடத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டொம் பெண்டன் மற்றும் பென் டக்கட் ஜோடி நிதான தொடக்கத்தையே தந்தனர். ஆனால் மத்திய வரிசையில் அனுபவ வீரர் ஜோ ரூட், அணித்தலைவர் ஹரி புரூக் மற்றும் பின்வரிசையில் வில் ஜேக்ஸ் ஆகியோரது சிறப்பாட்டம் காரணமாக இங்கிலாந்து அணியானது 48.1 ஓவர்களில் 265 ஓட்டங்கள் பெற்றது.
இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் ஹர்ரி புரூக் அரைச்சதம் விளாசி 67 ஓட்டங்கள் பெற, வில் ஜேக்ஸ் 5 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் குவித்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அறிமுக வீரரான சசிந்து கொலம்பகே சிறப்பாகப் பந்துவீசி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையவில்லை. ஆரம்பவீரர்களில் ஒருவரான பெதும் நிஸங்க 27 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். எனினும் குசல் மெண்டிஸ் நிதானமாக ஆடி 42 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் வில் ஜேக்ஸ் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இலங்கையின் மத்திய வரிசை வீரர்களை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்த அவர் இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தினார். இதனால் இலங்கை அணி 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 176 ஓட்டங்கள் மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் போராடியிருந்த துனித் வெல்லாலகே 36 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ஓட்டங்கள் குவித்தார்.
இங்கிலாந்து தரப்பில் வில் ஜேக்ஸ் 7 ஓவர்களில் வெறும் 22 ஓட்டங்கள் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மறுமுனையில் ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து தரப்பின் வெற்றியை உறுதி செய்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக வில் ஜேக்ஸ் தெரிவாகியிருந்தார்.
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (24) நடைபெறவுள்ளது.


