T20 தொடரில் இலங்கையை வைட்வொஷ் செய்த இங்கிலாந்து

மன்செஸ்டரில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி T20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.  

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 3-0 என இங்கிலாந்து முழுமையாகக் கைப்பற்றி இலங்கையை வைட்வொஷ் செய்துள்ளது.   

நேற்று முன்தினம் (19) நடைபெற்ற இந்த போட்டியில் முன்னதாக நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியினர் முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்தனர்.   

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி இந்த தொடரில் வெளிப்படுத்திய மிக மோசமான ஆட்டத்துடன் 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. தனது இறுதி விக்கெட்டுக்கள் 6 இணையும் வெறும் 41 ஓட்டங்களில் இழந்த இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பெதும் நிஸ்ஸங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ஓட்டங்களும் எடுத்தனர். 

இங்கிலாந்து பந்துவீச்சில் சோன்னி பேக்கர், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

பின்னர் 125 ஓட்டங்கள் என்கிற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி வெறும் 9.4 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கினை 2 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களுடன் அடைந்தது.  

இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் பெற்றார். 

இலங்கை பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மாத்திரம் ஒரு விக்கெட்டினை சாய்த்தார். இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை அணிக்கு எதிராக T20 போட்டிகளில் இங்கிலாந்து 15ஆவது தொடர் வெற்றியினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயகனாக சோன்னி பேக்கரும், தொடர் நாயகனாக ஹர்ரி புரூக்கும் தெரிவாகியிருந்தனர்.