புதிய கடவுச்சீட்டுகளின் தரம் குறைவு; சில நாடுகள் நிராகரிப்பதாக முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

புதிய இலங்கைக் கடவுச்சீட்டுகளின் தரக் குறைபாடு காரணமாக, முன்னாள் எம்.பி ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய கடவுச்சீட்டை சரியாக வாசிக்க முடியாமையால் அது போலியானது என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகித்ததாகக் கூறிய அவர், பக்கங்கள் 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டும் கட்டணம் குறைக்கப்படவில்லை என்றும், முத்திரை மை மறுபக்கத்திற்கு ஊடுருவுவதால் சில நாடுகள் கடவுச்சீட்டை நிராகரிப்பதாகவும் சாடினார்.

எனினும் இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, பக்கங்களைக் குறைப்பது சர்வதேச நடைமுறையே எனக் கூறியதுடன், புதிய மின்னணு கடவுச்சீட்டு (e-passport) முறைமையை அறிமுகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் தீர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.