
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள், கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தீர்க்கப்பட்டதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
பொதுநிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிரிக்கெட் நிர்வாகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டது.
மைதானம் தொடர்பான பணிகள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன.” உட்புற விளையாட்டு அரங்கம் (Indoor Stadium) உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட இந்தத் திட்டத்திற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்யும் நோக்கில் ஜனவரி மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுக்களால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால், இத்திட்டத்தின் சட்டரீதியான முன்னேற்றம் தடுக்கப்பட்டது.
“இந்த நடவடிக்கையினால் யாழ்ப்பாண மக்களுக்கே இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசியல் குழுக்கள் யாழ். சிறுவர்களின் வாய்ப்புகளை அழித்துவிட்டன. அரசியல் நோக்கங்களுக்காகக் குழந்தைகளின் கனவுகளையும் விளையாட்டு வாய்ப்புகளையும் அழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என அமைச்சர் கமகே மேலும் குறிப்பிட்டார்.


