
தெற்காசிய கால்பந்து சமமேளனத்தின் (SAFF) உப தலைவராக, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பூட்டானின் திம்பு நகரில் நேற்று (01) நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தின் போதே இவர் இப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
சர்வதேச கால்பந்து நிர்வாகத்தில் இலங்கையின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜஸ்வர் உமர் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புல்வெளி மட்டக் கால்பந்து குழுவிலும் (Grassroots Football Committee), ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் அபிவிருத்திக் குழுவிலும் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.
தெற்காசிய கால்பந்து சமூகத்தின் மத்தியில் அவர் பெற்றுள்ள நம்பிக்கையையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில்; இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைத்தீவுகள், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அனைத்து 7 உறுப்பு நாடுகளின் ஏகோபித்த ஆதரவையும் ஆதரவு வாக்குகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இவரது தலைமையின் கீழ், மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) உலகத் தரவரிசையில் இலங்கை அணி 20 இடங்களுக்கும் மேலாக முன்னேறி, 207ஆவது இடத்தில் இருந்து 187ஆவது இடத்தைப் பிடித்தது. இது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இலங்கை பெற்றுக்கொண்ட மிகச் முன்னேற்றமாகும்.
இதேவேளை, பங்களாதேஷைச் சேர்ந்த காசி சலாஹுதீன், தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் போட்டியின்றி தெற்காசிய கால்பந்து சமமேளனத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


