
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘B’ பிரிவின் இறுதி லீக் ஆட்டத்தில், கத்தார் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போஸ்னியா-ஹெர்சகோவினா அணி வரலாற்று ரீதியாக முதல்முறையாக நாக்-அவுட் (சுற்று 32) சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் கத்தார் அணி, கடந்த முறை தனது சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பையைப் போலவே இந்த முறையும் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
போட்டியின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய போஸ்னியா அணிக்கு, 18 வயதான இளம் வீரர் கெரிம் அலாஜ்பெகோவிக் ஒரு அபாரமான கோல் அடித்து முன்னிலை தந்தார். அடுத்த 5 நிமிடங்களில் நட்சத்திர வீரர் எடின் டிஸெகோ அடித்த பந்து, கத்தார் கோல்கீப்பர் மஹ்மூத் அபுநாடா மீது பட்டு ஓன்-கோலாக (Own Goal) மாறியதால் போஸ்னியா 2-0 என முன்னிலை பெற்றது.
இருப்பினும், முதல் பாதியின் 42-வது நிமிடத்தில் கத்தாரின் அனுபவ வீரர் ஹசன் அல்-ஹைதோஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. தொடர்ந்து 55-வது நிமிடத்தில் அல்-ஹைதோஸ் காயமடைந்து கண்ணீருடன் வெளியேறியது கத்தாருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
இறுதியாக ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் போஸ்னியாவின் எர்மின் மஹ்மிக் 3-வது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 4 புள்ளிகளுடன் இருக்கும் போஸ்னியா அணி, சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளின் வரிசையில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் பலத்த வாய்ப்பைப் பெற்றுள்ளது.


