சர்வதேச கால்பந்து தரவரிசையில் இலங்கை 191-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஆசியக் கிண்ணக் கால்பந்து தகுதிகாண் போட்டிகளில் வெளிப்படுத்திய அபாரத் திறமையின் அடிப்படையில், இலங்கை கால்பந்து அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கால்பந்து தரவரிசையில் 191-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு 191-வது இடத்தில் இருந்த இலங்கை அணி, அதன் பின்னர் படிப்படியாக வீழ்ச்சியடைந்து 2024-ஆம் ஆண்டளவில் தரவரிசையில் 205-வது இடம் வரை பின் தள்ளப்பட்டிருந்தது. தற்போது கிடைத்துள்ள இந்த முன்னேற்றம் இலங்கை கால்பந்தாட்டத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) மொத்தம் 211 நாடுகளைக் கருத்திற் கொண்டு இந்தத் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் சான் மரினோ அணி இறுதி இடத்தில் உள்ளது. புதிய தரவரிசைப் பட்டியலில் இலங்கைக்கு முன்னால் 190-வது இடத்தில் சமோவாவும், இலங்கைக்குப் பின்னால் 192-வது இடத்தில் அமெரிக்க சமோவாவும் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் 202-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை அணி அடுத்ததாகத் தரவரிசையில் தன்னைவிட முன்னிலையில் உள்ள புரூணை (186-வது இடம்) அணியுடன் அடுத்த மாதம் 8-ஆம் திகதி தாய்லாந்தின் ராஜ்மங்கலா மைதானத்தில் சர்வதேச நட்புரீதியான போட்டியில் மோதவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் தரவரிசையில் மேலும் பல இடங்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படும். பிபா (குஐகுயு) விதிகளின்படி, தரவரிசையில் பின்வரிசையில் உள்ள அணி ஒன்று முன்னிலையில் உள்ள அணியைத் தோற்கடிக்கும் போது, அதிக புள்ளிகள் வழங்கப்பட்டு தரவரிசையில் வேகமான முன்னேற்றம் கிடைக்கும்.

இலங்கை அணி தனது கடைசி ஆசியக் கிண்ண தகுதிகாண் போட்டியில் சீன தாய்பே அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கையின் தரவரிசைப் புள்ளிகளுடன் 14.42 புள்ளிகள் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. சீன தாய்பே அணியானது தரவரிசையில் 174-வது இடத்தில் உள்ள பலமான அணி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு முதல் இலங்கை அணி சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லாவோஸை 2-1 என்ற கோல் கணக்கிலும், புரூணையை 1-0 என்ற கணக்கிலும், சீன தாய்பேயை 3-1 என்ற கணக்கிலும், துருக்மெனிஸ்தானை 1-0 என்ற கணக்கிலும் தோற்கடித்துள்ளது. மேலும், மாலைதீவுகள் அணியுடனான போட்டியை 1-1 எனச் சமநிலையில் முடித்தது. இருப்பினும், கடந்த ஆண்டில் தாய்லாந்து, மாலைதீவுகள மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகிய அணிகளிடம் சில தோல்விகளையும் சந்தித்திருந்தது.

இலங்கை கால்பந்து வரலாற்றில் 1998-ஆம் ஆண்டு அணி 122-வது இடத்தைப் பிடித்து மிகச்சிறந்த நிலையில் இருந்தது. 2019-இல் 205-வது இடத்திற்குச் சரிந்து, 2022-இல் மிக மோசமான நிலையை எட்டியிருந்த போதிலும், தற்போது மீண்டும் எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.