இலங்கையில் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைக்க சவூதி நிதியம் 6 மில்லியன் டாலர் நிதி உதவி

இலங்கையில் ‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்காக சவூதி அபிவிருத்தி நிதியம் மேலதிகமாக 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முன்வந்துள்ளது.நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.சவூதி அபிவிருத்தி நிதியம் ஏற்கனவே இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், டிட்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாலைக் கட்டமைப்புகளை அவசரமாகச் சீரமைப்பதற்காக தற்போது மேலதிகமாக 6 மில்லியன் டாலர்களை வழங்க அந்நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது.