லேக் ஹவுஸ் ஆசிரியர் பீட பணிப்பாளருடன் ஸ்கை தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கையின் அரச ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சிசிற யாப்பா அவர்களுக்கும், ஸ்கை தமிழ் ஊடகம் மற்றும் சிலோன் மீடியா போரம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் (24) வியாழக்கிழமை லேக் ஹவுஸில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், ஊடக அமைச்சில உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ‘ஸ்கை தமிழ்’ மற்றும் ‘ஸ்கை லங்கா நியூஸ்’ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே.எம். பாஸித், ஸ்கை தமிழ் நியூஸ் முகாமையாளர் ஆஷிகா பர்ஸான், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம். ஜெஸ்மின் மற்றும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் விளம்பர முகாமையாளர் மும்தாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது ஸ்கை தமிழ்’ மற்றும் ‘ஸ்கை லங்கா நியூஸ்’ டிஜிடல் செய்திச் சேவை நிறுவனம் கத்தார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தளமாக கொண்டு இயங்கி வருவதையிட்டு லேக் ஹவுஸ் ஆசிரியர் பீட பணிப்பாளர் சிசிற யாப்பா பாராட்டியதுடன் எதிர்காலத்தில் டிஜிடல் ஊடக துறையில் லேக் ஹவுஸுடன் இணைந்து பணியாற்றவருமாறு இதன்போது அழைப்பு விடுத்தார்.

மேலும் வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் மற்றும் மத்திய கிழக்கு தொடர்பான செய்திகளைத் துரிதமாகவும் விரிவாகவும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் செய்திகளை பரிமாறிக்கொள்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன்லேக் ஹவுஸ் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்தியாளராக (தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்) ஸ்கை தமிழ் நியூஸ் முகாமையாளர் ஆஷிகா பர்ஸானை நியமிப்பது தொடர்பாக இணக்கம் காணப்பட்டது.

மேலும், சிலோன் மீடியா போரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” உருவாக்கத்திற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கையும் இக்கலந்துரையாடலின் போது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.