
இலங்கையின் தெற்குப் பகுதி கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 25 இந்தோனேசிய மீனவர்கள் பலதரப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் கொழும்பு துறைமுகத்திற்குப் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி ‘கே.எம். கருடா ஜெயா VI’ (KM Garuda Jaya VI) என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில், அதில் இருந்த மீனவர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.ஆஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்பு எல்லைப் பகுதிக்குள் (Australian Search and Rescue Region) நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, கடலில் தத்தளித்த 25 பேரையும் ‘எம்.வி. மூன்ஸ்டோன்’ (MV Moonstone) என்ற வர்த்தகக் கப்பல் உடனடியாக மீட்டு, கொழும்பிலுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) தகவல் அளித்தது.
இதனையடுத்து, கொழும்பு MRCC மையத்தின் ஒருங்கிணைப்பில் உடனடியாகச் செயற்பட்ட இலங்கை கடற்படை, மீட்கப்பட்ட மீனவர்களைக் கரைக்கு அழைத்து வர இரண்டு கடற்படைப் படகுகளை அனுப்பியது.
மீட்கப்பட்ட 25 இந்தோனேசிய மீனவர்களையும் நேற்று (24) மாலை கொழும்பு துறைமுகத்திற்குப் பத்திரமாகக் கொண்டு வந்த கடற்படையினர், அவர்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகளையும் வழங்கினர்.இதனைத் தொடர்ந்து, அந்த மீனவர்கள் அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


