
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் உள்ளிட்ட சான்றுகளுக்கான பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு நினைவூட்டல் கடிதம் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் பெயரிடப்பட்டுள்ள நீர்கொழும்பு பெண் சிறைச்சாலையின் 25 பெண் கைதிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கின் மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளதுடன், அவர்களில் 81 பேர் ஆண்கள் என்றும் 25 பேர் பெண்கள் என்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இம்மோதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான மரண பரிசோதனைகள் நிறைவடைந்து அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என CID சுட்டிக்காட்டியுள்ளது.
வழக்கு விசாரணை மீண்டும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


