
-எம்.பஹத் ஜுனைட் –
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் SLEAS அவர்களின் தலைமையில் 17.08.2026ம் திகதி தொடக்கம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பாடரீதியான பொதுப்புள்ளி பகுப்பாய்வும் பாட ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலும் நடைபெற்று வருகின்றது.
கலந்துரையாடல்களின் போது மாணவர்கள் பெற்றுக் கொண்ட கடந்த மாகாண மட்ட புள்ளி மற்றும் பாடசாலை மட்ட இரண்டாம் தவணைப்பரீட்சை புள்ளி தொடர்பாகவும் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
குறைவான புள்ளிகளைப்பெற்ற மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரித்தல், மாணவர்கள் இடர்படும் விடயங்களைக்கண்டறிதல், கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் கல்விப்பொதுத்தராதர சாதாரணப்பரீட்சைக்கு குறுகிய காலம் மாத்திரமே காணப்டுவதனால் அனைத்து ஆசிரியர்களும் தங்களது செயற்பாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
இக்கலந்துரையாடலில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மட்டகளப்பு மத்தி வலயத்தின் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கற்பித்தல் நுட்பம் தொடர்பாகவும் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர்
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், இக்கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் இவ்வாறான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி தேசியத்தில் முதலிடம் பெறுவதற்கு அயராதுழைக்கும் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் SLEAS தலைமையிலான குழுவினருக்கு ஆசிரியர்கள் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


