அம்பாறை உட்பட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (20) மழையுடனான வானிலையும், மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் பிரதானமாக உலர் வானிலை நிலவும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் மற்றும் தற்காலிகப் பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.