இலங்கையிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோத பரிமாற்றம் – 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் பாரியளவிலான வெளிநாட்டு நாணயங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் 4 தனியார் வங்கிகளின் மேலாளர்கள் (Managers) பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த பணப் பரிமாற்ற நிலையம் (Money Changer) ஒன்று, எவ்வித பொருட்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்யாமல், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்த பாரிய நிதிப் பரிமாற்றம் பல வங்கி வழிகள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வித இறக்குமதிப் ஆவணங்களும் இன்றி இவ்வளவு பெரிய அளவிலான பணம் எவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது என்பதை அறிவதற்காகவே இந்த வங்கி மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.