ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட கப்பல்கள் எத்தனை, அவற்றில் எத்தனை தப்பிச் சென்றன என்பது குறித்த விபரம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து 95 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது.

போர் தொடங்குவதற்கு முன்பு நாளொன்றுக்கு சராசரியாக 100 கப்பல்கள் பயணித்த நிலையில், பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 12 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 279 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையைக் கடந்துள்ளன. ஏப்ரல் 8 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், அதன் பிறகு இதுவரை 45 கப்பல்கள் மட்டுமே இப்பாதையைப் பயன்படுத்தியுள்ளன.

கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 22 கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக கடல் எல்லைக்குள் 8 கப்பல்களும், ஓமான் எல்லைக்குள் 6 கப்பல்களும் தாக்கப்பட்டுள்ளன. கத்தார், ஈராக், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளிலும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, மார்ச் 11 அன்று தாய்லாந்தின் ‘Mayuree Naree’ கப்பல் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் முற்றுகை மற்றும் ஈரானின் புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகளால் கப்பல் நிறுவனங்கள் பெரும் குழப்பத்தில் உள்ளன.

இந்த மோதலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் 20 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது குறிப்பாக ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உத்தரவின் பேரில், கண்ணிவெடி அச்சுறுத்தல் காரணமாக கப்பல்கள் புதிய மாற்றுப் பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.