
தோஹா: கத்தாரில் நடைபெற்று வரும் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் முடிவில், இந்திய வீரர்களான டி. குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அதே சமயம், உலகின் நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சன் ஒரு அரிய தோல்வியைச் சந்தித்துள்ளார்.
உலக சாம்பியனான குகேஷ், ஒன்பது சுற்றுகள் முடிவில் 6.5 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். இரண்டாம் நாளில் அனிஷ் கிரியிடம் டிராவையும், டேவிட் ஆண்டனிடம் வெற்றியையும் பெற்றார். இருப்பினும், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவிடம் ஒரு தோல்வியைத் தழுவினார்.
மற்றொரு இந்திய நட்சத்திரமான அர்ஜுன் எரிகைசி 6.5 புள்ளிகளுடன் முன்னிலையில் நீடிக்கிறார்.
ஐந்து முறை ரேபிட் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை, ரஷ்யாவின் விளாடிஸ்லாவ் அர்டெமிவ் தோற்கடித்தார். இதன் மூலம் 7 புள்ளிகளுடன் கார்ல்சன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
விளாடிஸ்லாவ் அர்டெமிவ் மற்றும் ஹான்ஸ் நீமன் ஆகியோர் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீராங்கனை கோனேரு ஹம்பி அபாரமாக விளையாடி, 7 சுற்றுகள் முடிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓபன் பிரிவில் கடைசி 4 சுற்றுகளும், மகளிர் பிரிவில் மீதமுள்ள ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி நாள் ஆட்டம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


