
இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று (29) நடைபெற்றது. குவஹாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களைக் குவித்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் லாரா வோல்வர்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 143 பந்துகளில் 169 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதேபோல, உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த வீராங்கனை என்ற சாதனையை லாரா வோல்வர்ட் படைத்தார்.
பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லோரென் பெல் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
320 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 42.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவி நெட் சிவர் 64 ஓட்டங்களையும், ப்றன்ட், அலிஸ் கெப்சி 50 ஓட்டங்களையும், டெனி வியட் – ஹொஜ் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 7 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், நாடின் டி க்ளார்க் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியது.
அதிரடியாக விளையாடி சதம் விளாசிய தென்னாப்பிரிக்க அணியின் தலைவி லாரா வோல்வர்ட் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, இன்று நடைபெறவுள்ள 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆடும் இந்தியா அல்லது அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
(M.Rishad)


