மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் ஏ.ஆர். மன்சூர் தொழில்நுட்ப அறை திறப்பு – ஸ்மார்ட் போர்ட் கையளிப்பு

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் “ஏ.ஆர். மன்சூர் தொழில்நுட்ப அறை” திறப்பு மற்றும் ஸ்மார்ட் போர்ட் கையளிக்கும் சிறப்பு விழா இன்று (18) பாடசாலை அதிபர் I. உபைத்துல்லாஹ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் J.லியாக்கத் அலி கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

இதன்போது, பாடசாலையின் புதிய ஏ.ஆர். மன்சூர் தொழில்நுட்ப அறை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக்கு ஸ்மார்ட் போர்ட் ஒன்றும் பிரதம அதிதி ரஹ்மத் மன்சூர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

மாணவர்களின் கற்றல் திறன்களை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் ஸ்மார்ட் டீவி வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் ரஹ்மத் மன்சூர் அவர்கள் குறுகிய காலத்திற்குள் மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.மேலும், பாடசாலை நிர்வாகத்தினால் பிரதம அதிதி ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் SKY தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர்JM. வாஷித், Asia Foundation இணைப்பாளர் வலித், பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், ரஹ்மத் பவுண்டேஷன் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இச்சிறப்பு விழா பாடசாலை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.